×

வியாசர்பாடி சாமியார் மடம் பகுதியில் உள்ள கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பூர்: வியாசர்பாடி சாமியார் மடம் பகுதியில், புதர்மண்டி காணப்படும் கோயில் குளத்தை சீரமைத்து, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே சாமியார் தோட்டம் 1வது தெருவில் கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் கோயில் உள்ளது. திருப்போரூரில் முத்துசாமி பக்தர் செங்கமலத்தாயார் ஆகியோரின் 4வது மகனாக பிறந்தவர் சிவப்பிரகாசம், சிறு வயதிலேயே ஆன்மீகத்தின் மீது அதிக நாட்டம் கொண்டு அதன் வழி ஈர்க்கப்பட்டு, சிறு வயதிலிருந்து தியானங்களில் அதிக பொழுதை கழித்து வந்தார்.

வேதாந்த பானு சைவ ரத்தின தேசிகரிடம் வேதாந்த நூல்களை கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலேயே குடும்பத்தை பிரிந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டு கரத்தில் அன்னம் பெற்று உண்டதால் இவருக்கு கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் என பெயர் வந்தது. மேலும், ஆன்மீகப் பெரியவர்களுக்கும், சாதுக்களுக்கும் நிரந்தரமாக ஒரு மடம் அமைக்க விரும்பிய சிவப்பிரகாச சுவாமிகள் வியாசர்பாடியில் தற்போது உள்ள இடத்தை தேர்வு செய்து அங்கு வசிக்க துவங்கினார். நாளடைவில் அது சாமியார் தோட்டம் என பெயர் பெற்றது. 1918ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம்தேதி சிவப்பிரகாச சுவாமி சமாதி அடைந்தார். இவரது சமாதியின் மீது சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யபட்டு, தற்போது இதனை கோயிலாக பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த, கோயிலின் பின்பகுதியில் விநாயகர் சிலையும், நாக தேவதை சிலைகளும், சிவப்பிரகாச சுவாமிகளின் சீடராக இருந்த முருகானந்த சுவாமிகளின் சமாதியும் உள்ளது. இவர் பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்தவர். 1918 முதல் 1958 வரை இவர் இந்த கோயில் மடாதிபதியாக இருந்தார். 1958ம் வருடம் அக்டோபர் மாதம் 24ம்தேதி சமாதி அடைந்தார். மேலும், 1889ம் ஆண்டு ராமானுஜ எத்தீஸ்வரர் என்பவர் உயிரோடு ஜீவசமாதி அடைந்துள்ளார். அவரது சமாதியும் இங்கு உள்ளது.

இவ்வாறு, பல சிறப்புகளை பெற்ற இக்கோயில் ஆரம்பத்தில் 14 ஏக்கரில் பறந்து விரிந்து இருந்தது. அதன்பிறகு, பொதுமக்கள் கோயில் இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து, தங்கள் பெயரில் மாற்றிக் கொண்டனர் என கூறப்படுகிறது. தற்போது, மூன்றரை ஏக்கரில் இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபூஜை வெகு விமர்சையாக நடைபெறும். இதில், தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான சித்தர்கள் மட்டுமல்லாமல், காசியில் இருந்தும் ஏராளமான சித்தர்கள் வந்து தங்கி தியானம் செய்துவிட்டு செல்வது வழக்கம். தியானம் மற்றும் ஆன்மிகத்தை பற்றி ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்வது உண்டு.

இந்த, கோயிலில் இலுப்பை மரம், நாகலிங்க மரம், புங்கை மரம், வில்வம் மரம், வன்னி மரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மூலிகை மரங்கள் உள்ளன. ஐப்பசி மாதம் நடைபெறும் நாக சதுர்த்தி விழாவும் இங்கு மிகவும் பிரபலம். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கோயில், தற்போது சுற்று சுவர்கள் பாதி கீழே விழுந்து தகரம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள சுவர்களின் கீழ்பகுதி முழுவதும் சிதைந்து, சுவர் எப்போது விழும் என்ற ஒரு அபாயத்தில் உள்ளது. அவ்வாறு சுவர் விழுந்தால் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழ்வதற்கும் வாய்ப்பு உண்டு என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

மேலும், இந்த கோயில் குளம் தூர்வாரப்படாமல் புதர்மண்டி உள்ளதை சீரமைத்து, 4 புறமும் படிக்கட்டுகள் வைத்து, சுற்றி சுவர் அமைத்து, கோயிலின் உள்ளே நடைபாதைகள் அமைக்கவும், கோயிலில் தங்கி தினமும் பூஜை செய்து வரும் சுவாமிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, கோயிலுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : Temple pond ,Vyasarbadi Chamiyar monasture , Vyasarpadi Samiyar Mutt, temple pond should be repaired, public demand
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...